search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை எம்எல்ஏ அசோக் ஆனந்து"

    சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அசோக் ஆனந்து எம்.எல்.ஏ.வின் பதவி பறிபோனது. இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Puducherry #AshokAnand #MLA #Vaithilingam
    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்து தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவரது தந்தையான ஆனந்தன் கடந்த 2006-07ம் ஆண்டு காலகட்டத்தில் புதுவை மாநில பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளராக இருந்தார்.

    அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக சி.பி.ஐ.க்கு புகார்கள் சென்றன. அதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆனந்தன், அவரது மனைவி விஜயலட்சுமி. அவர்களது மகன் அசோக் ஆனந்து ஆகிய 3 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கு விசாரணை கடந்த 2008-ம் ஆண்டு முதல் புதுவை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த விஜயலட்சுமி இறந்துவிட்டதால் அவரது பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆனந்தன் மற்றும் அசோக் ஆனந்து ஆகியோர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    இதற்கிடையே கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

    இந்தநிலையில் அவர் மீதான சொத்து குவிப்பு புகார் குறித்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மாதம் 30-ந்தேதி தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் ஆனந்தன் மற்றும் அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. ஆகியோரை குற்றவாளி என்று அறிவித்து இருவருக்கும் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும், ரூ.1 கோடியே 74 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார்.

    தண்டனை வழங்கப்பட்ட அசோக் ஆனந்து தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டத்துறையிடம் ஆலோசனை பெற்றார்.

    ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றுள்ளதால் அசோக் ஆனந்தின் எம்.எல்.ஏ. பதவி கடந்த 30-ந்தேதி முதல் தானாகவே பறிபோனது. இந்த சட்டத்தின்கீழ் புதுவையில் முதன்முதலில் பதவியை பறிகொடுத்த எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து என்பது குறிப்பிடத்தக்கது.

    இதைத்தொடர்ந்து அசோக் ஆனந்து போட்டியிட்டு வெற்றிபெற்ற தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார். இதற்கான உத்தரவினை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் பிறப்பித்துள்ளார்.

    சட்டசபை காலியானதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு முறைப்படி தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். அதன்பின் தேர்தல் ஆணையம் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்கும். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அசோக் ஆனந்து 6 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×